-365951 பேர் வேலையில்லாமல் உள்ளனராம்-
இலங்கையில் சுமார் 365951 பேர் வேலையில்லாமல் உள்ளதாக கூறியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய 2025ம் ஆண்டில் வேலையற்றோர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கல்வித் தகுதிகளின் அடிப்படையில் க.பொ.த சாதாரண தரத்திற்குக் கீழே உள்ள 103,308 பேரும், க.பொ.த சாதாரண தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 91,405 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குவர். மேலும், க.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற 128,984 பேரும், இளங்கலைப் பட்டம் மற்றும் உயர் கல்வித் தகுதிகள் பெற்ற 42,254 பேரும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் அடங்குகின்றனர். இவர்களில், 12,000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஏற்கனவே வேலை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களுக்கும் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி வேலை வழங்கப்படும். 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5 ஆக இருந்த வேலையின்மை வீதம் 2025 ஆம் ஆண்டில் 3.8 வீதமாகக் குறைந்துள்ளது. இதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.7 வீதமாக இருந்த வேலையின்மை 2025ல் 3.8 வீதமாகக் குறைந்துள்ளது என்றார்.


















