-11 இலட்சம் பேர் நிர்க்கதி-
-வடக்கில் 6 பேர் மரணம்-
டித்வா புயல் தாக்கத்தை அடுத்து இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக நேற்றுவரை 334 பேர் உயிரிழந்தமையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் உறுதிசெய்துள்ளது. அதேவேளை 370 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ளது. காணாமல்போன பலர் இறந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 607 குடும்பங்களைச் சேர்ந்த 11 இலட்சத்து 18 ஆயிரத்து 929 பேர் நேற்றுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக 1494 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 55 ஆயிரத்து 747 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 96 ஆயிரத்து 790 பேர் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
நிவாரண விநியோகம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவளை வடக்கு மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 6 மரணங்களும் 4 பேர் காணமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















