-த.சுபேசன்-
நெற்செய்கையாளர்களுக்கான இலவச உர விநியோகத்தில் உள்ள சில இறுக்கமான நடைமுறைகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக சிரமங்களை எதிர்நோக்கும் விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்;
குறிப்பாக வயது முதிர்ந்த விவசாயிகள், பெண்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உரம் பெற்றுக் கொள்வதற்காக தமது பிள்ளைகளை ,நெருங்கிய உறவுகளை உரிய ஆவணங்களுடன் அனுப்பும் போது கூட அங்கேயுள்ள உத்தியோகத்தர்களினால் வயலுக்கு உரித்தானவர் வருகை தராமல் உரம் வழங்க முடியாது என்ற இறுக்கமான நடைமுறை பின்பற்றப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
மிகக் குறைந்தளவான உரத்திற்கு கூட நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
குறிப்பாக, இந்த இறுக்கமான நடைமுறை கைதடி கமநல சேவை நிலையத்தில் காணப்படுகின்றது. தனங்கிளப்பு, மறவன்புலோ பகுதிகளில் நெல் வயல்கள் உள்ள விவசாயிகள் கைதடி கமநல சேவை நிலையத்தை நாடும்போது இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
பரப்பிற்கு 400 கிராம் என்ற அடிப்படையில் மேற்படி இலவச உரம் வழங்கப்படுகின்றது. சிலர் 10 பரப்பு வயலுக்குரிய உரத்துக்கு நேரம் செலவழித்து அங்கு செல்லும்போது இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவதால்; அதிருப்தி அடைகின்றனர்.
எனவே இந்த நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தி உரிய ஆவணங்களுடன் செல்லும்போது அவர்களுக்கான உரம் வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


















