-செ.ரவிசாந்-
புதிய அரசியலமைப்பை கொண்டு வர நீண்டகாலம் எடுக்குமென்பதால் மாகாண சபைப் பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முயற்சிக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் திருமதி.கோசலை மதன் தெரிவித்தார்.
‘அமைதிவழிப் போராட்டமும், அறவழிச் சிந்தனையும்’ எனும் நூலின் அறிமுக நிகழ்வு அண்மையில் யாழ். பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே, மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கையில் சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பை ஏற்படுத்துவது மிகவும் சிக்கலானது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான பல்வேறு செயற்பாடுகளை அனைத்துத் தரப்பினரும் இணைந்து முன்னெடுக்க வேண்டியது அவசியமானது. இதற்கான முயற்சிகளை எதிர்வரும் காலங்களில் நாம் திட்டமிட்டுச் செயற்படுத்த வேண்டியிருக்கிறது.
எனவே புதிய அரசியலமைப்பைப் கொண்டு வர நீண்டகாலம் எடுக்கும் என்பதால் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருக்கக் கூடிய மாகாண சபைப் பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்துவதே உகந்தது
எனவே,மாகாண சபைப் பொறிமுறையை முழுமையாக அமுல்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்க முன்வர வேண்டும் என்றார்.
















