கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவிடம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்தது.
இந்த விடுவிப்பு சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதனால், இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படுவதாயின், அடுத்த கட்டம் குறித்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவம் ஊடாக மன்றுக்கு அறிவிக்குமாறு நீதிவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
அவர் சட்டமா அதிபரினால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக நான்காவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காரணத்திற்காகவும் திகதி வழங்கப்படமாட்டாது. அரச சட்டத்தரணிக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம். இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. வேறெந்த விடயத்திற்காகவும் விசாரணையைத் தள்ளிப்போட முடியாது என நீதிவான் தெரித்தார்.


















