-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்-
மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு நேற்று நடைபெற்றது.
மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற அமர்வில் பிரதி முதல்வர் தினேஸ்குமார், உறுப்பினர்கள், மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் விசேட உரையினை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து வரவு செலவு திட்டம் தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள்,பிரதி முதல்வர் தமது கருத்துகளை தெரிவித்ததுடன், அநேகமான உறுப்பினர்கள் வரவு – செலவுத் திட்டத்திற்கு வரவேற்பளித்தனர்.
இதன்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் வரவு- செலவுத் திட்டம் வாக்களிப்புக்கு விடப்பட்டது. 34 உறுப்பினர்களைக் கொண்ட மாநகரசபையில் ஒரு உறுப்பினர் தவிர 33 உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர் வாக்களிப்பின்போது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 8 பேர் நடுநிலையாகவும் சுயேட்சைக்குழு மற்றும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் என 22 பேர் ஆதரவாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதனடிப்படையில் 19 மேலதிக வாக்குகளினால் இலங்கை தமிழரசுக்கட்சி வசமிருக்கும் மட்டக்களப்பு மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றது.


















