மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பல்வேறு உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள், வீதி உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து பல்வேறு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பண்டிகைக் காலம் என்பதன் அடிப்படையில் அதிகளவான சுகாதாரமற்ற உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக குறித்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக மன்னார் நகரசபை பகுதியில் பண்டிகைக்கால நடைபாதை வியாபார நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்றுண்டி மற்றும் ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்கள் மீதும் சுகாதரத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதேநேரம் மன்னார் நகர் பகுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியை வைத்திருந்ததுடன் சூடான உணவுகளை சுகாதார நடைமுறைகளை மீறி பிளாஸ்ரிக் வாளியில் களஞ்சியப்படுத்தியிருந்த உணவகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கோண்டுள்ளதோடு குறித்த உணவுகளையும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தமை குறிப்பிடத்தக்கது.


















