-பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர்-
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவித்தார்.
இலங்கை போர்க்குற்றவாளிகள் மீது கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கும் என வெற்றே கூப்பர் கூறினார்.
பிரித்தானியப் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரக்குழு கூட்டம் கடந்தவாரம் நடைபெற்றிருந்தபோது உமா குமாரன் எம்.பி. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக தமிழ்ச்சமூகத்துக்கான நீதி தொடர்பில் முன்னாள் வெளி விவகார செயலாளர் டேவிட் லெமியிடம் தான் வலியுறுத்தியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் என்பன உள்ளடங்கலாக போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டிருக்கக்கூடும் என நம்புவதற்கு ஏதுவான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன.
யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளன. ஆனால் போர்க்குற்றங்களிலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக எந்த
வொரு குற்றவியல் விசாரணைகளோ, நீதிமன்ற விசாரணைகளோ நடக்கவில்லை.
குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு இலங்கை அரசு தவறியிருப்பதுடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையைப் பாரப்படுத்துவதற்கு இடமளிக்கக்கூடிய ரோம சாசனத்தில் கைச்சாத்திடுவதற்கும், இவ்விவகாரம் சார்ந்த அரசியல் தன்முனைப்பை வெளிப்படுத்துவதற்கும் தவறியிருக்கின்றது.
ஆக, தமிழ்மக்களுக்குரிய நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர், தமிழ்ச்சமூகம் தொடர்பில் நீண்டகாலமாகத் தாம் கொண்டிருக்கும் நியாயபூர்வமான கரிசனைகள் தொடர்பில் பிரஸ்தாபித்தார். அத்தோடு மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான செயற்திறன்மிக்க, நிலையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த மார்ச் மாதம் நால்வருக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் தடைகளை விதித்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இவ்விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் முன்நோக்கியே நகர்கின்றன என வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். அதனைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த உமா குமாரன், போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான பிரித்தானிய அரசாங்கத்தின் தடைவிதிப்பு மேலும் பரவலாக்கப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.


















