நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள முழு நாடுமே ஒன்றாக என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 53,737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1,205 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் விநியோகத்தை வலுவிழக்கச் செய்தல், போதைப்பொருளுக்கான கேள்வியை இல்லாமல் செய்தல், நடவடிக்கைகளை விரைவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, அதன் பயன்பாட்டை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் இந்த நடவடிக்கை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட 54,239 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 302 கிலோகிராம் ஹெரோயின், 1192 கிலோகிராம் ஐஸ், 1717 கிலோகிராம் கஞ்சா, 71 கிலோகிராம் குஷ், 41 கிலோகிராம் ஹசிஸ், 17 கிலோகிராம் மதனமோதகம், 90 கிலோகிராம் மாவா, 6 கிலோகிராம் கொக்கைன் மற்றும் 1,04,329 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் 50 சந்தேகநபர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,192 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவும் பெறப்பட்டது.
மேலும், ஜனவரி முதல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணை மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கமைய, இதுவரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக 79 இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளனர். அவர்களில் குற்றச்செயல்களுடன் நேரடித் தொடர்புடைய சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்ட 6,641 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 73,634 சந்தேகநபர்களும், நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4,80,335 சந்தேகநபர்களும் கைதாகினர்.


















