பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால், பொய் கூறி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பு மாநகரசபையின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தமை தொடர்பில் ஆளும் தரப்பினர் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுக்களுக்கு ஊடகங்களுக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்:-
கொழும்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் சிலர் என்னை குறை கூறி வருகின்றனர். ஆனால் மாநகர சபையின் மேயர் தெரிவு செய்யும் வாக்களிப்பின்போது, ரகசிய வாக்கெடுப்பே இடம்பெற்றது.
அப்போது பகிரங்க வாக்களிப்புக்கு செல்வோம் என நாங்கள் அனைவரும் தெரிவித்திருந்தோம். ஆனால் மாகாண ஆணையாளருக்கு ஆலாசேனை வழங்கி அரசாங்கம் பலவந்தமாக ரகசிய வாக்கெடுப்புக்கு சென்றது. அந்த ரகசிய வாக்கெடுப்பில் வாக்குகளை பெற்றுக்கொள்ள பல்வேறு பொய் வாக்குறுதிகளை வழங்கி இருந்தார்கள்.
இவ்வாறு பொய் வாக்குறுதிகளை வழங்கியே மாநகர சபையின் ஆட்சியை பிடித்துக்கொண்டனர். ஆனால் பகிரங்க வாக்கெடுப்பொன்றுக்கு சென்றபோது, பொய் வாக்குறுதி வழங்கி பெற்றுக்கொண்ட அதிகாரத்தை தக்க வைத்துகொள்ள முடியாமல் போனது.
அதனால் பொய் கூறி ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால் பொய் கூறி ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்பதை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மேயர் தெரிவின்போது, ஜனாதிபதி, அமைச்சர்கள் ஊடாக பொய் வாக்குறுதி அளித்து, ஆதரவை பெற்றுக்கொண்ட பின்னர், 6 மாதம் சென்றும் அதனை நிறைவேற்ற முடியாமல்போனதால், அவர்கள் தற்போது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இதுதான் மாநகர சபையில் இடம்பெற்றது. அதற்கு என்னை குறைகூறி பயனில்லை. அவர்கள், ஏன் பொய்கூறி ஏமாற்றினீர்ள் என ஜனாதிபதியிடம் சென்று வேண்டும்.
அதனால் பொய் கூறி ஆட்சியை கைப்பற்றிக்கொள்ள முடியும். ஆனால் பொய் கூறி ஆட்சியை கொண்டு செல்ல முடியாது என்ற யதார்த்தத்தை புரிந்துகொள்ளுங்கள் என்ற செய்தியையே அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.


















