திருகோணமலை – வீரநகர் பகுதியில் கடலரிப்பினால் நேற்று பிற்பகல் வீடு ஒன்று தாழிறங்கியுள்ளதால் அதில் வசித்தவர்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்தனர்.
வீரநகர் கரையோரப் பகுதியில் சுமார் இரண்டு வாரகாலமாக 15 மீற்றருக்கு அப்பால் இருந்த கடல்நீரானது கடலரிப்பின் காரணமாக குறித்த கரையோர பகுதியை கடலுக்குள் உள்வாங்கியுள்ளது.
அத்துடன் கரையோரமாக இருந்த வீடுகளை தாக்கி வருகின்றது. இதனால் அங்கிருந்த வீடு ஒன்றின் அத்திவாரம் சேதமடைந்து வீட்டில் வெடிப்பு ஏற்பட்டு வீடு தாழிறங்கியுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீட்டில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்புத் தேடி உறவினர்கள் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர். கடலரிப்பின் காரணமாக கடற்கரை ஓரமாக வாழ்கின்றவர்கள், மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் கடலரிப்பை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


















