புதிய பயங்கரவாத சட்டவரைபு நாட்டின் ஜனநாயகத்தை கடுமையாக அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது என முன்னிலை சோசலிஷ கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அனர்த்தத்தினால் முழு சமூகமும் திகைத்துப் போயிருக்கும் ஒரு தருணத்தை பயன்படுத்தி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய ஒடுக்குமுறைச் சட்டமொன்றை நிறைவேற்றத் துடிக்கிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற வாக்குறுதியுடன்தான் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபு என்ற பெயரில் பழைய சட்டத்தை விடவும் அபாயகரமான சட்டத்தை உருவாக்குகிறார்கள். புதிய சட்டத்தின்படி, அரசாங்கத்தை ஒரு விடயத்தைச் செய்யுமாறு அல்லது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுப்பது பயங்கரவாதச் செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, அழிவுகரமான சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்திலிருந்து விலகுமாறு எவராவது அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால், அவர் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படலாம். வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதும் கூட இச்சட்டப்படி குற்றமாகும்.
தடுப்புக் காவல் உத்தரவுகளில் கையெழுத்திடும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் என்பவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் அல்ல.
ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டால் இரு வருட புனர்வாழ்வு என்றும், இல்லையெனில் 10 வருட சிறை என்றும் அச்சுறுத்தும் அதிகாரம் இச்சட்டத்தின் 56 ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ளது
சட்டத்தின் 63 ஆவது பிரிவின்படி, ஜனாதிபதி எந்தவொரு அமைப்பையும் தடை செய்ய முடியும். அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் பயங்கரவாதச் செயலாகக் கருதப்படும்.
அதுமட்டுமன்றி, விசேட காரணங்கள் இன்றி இராணுவத்தினர் வீடுகளுக்குள் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களைப் பரிசோதிக்கும் அதிகாரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்களின் அந்தரங்கங்களை நோட்டமிட மட்டும் சட்டங்களைக் கொண்டுவருகிறது. முன்னைய பயங்கரவாதத் தடைச் சட்டம் 6 மாதத்திற்கு எனக்கூறி கொண்டுவரப்பட்டு இன்னும் நீடிக்கிறது.
அதேபோல் இந்தச் சட்டத்தையும் நிலைநிறுத்தவே அரசாங்கம் முயல்கிறது. இந்த மக்கள் துரோகச் சட்டத்திற்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


















