-த.தே.ம.முன்னணியின் முக்கியஸ்தர் தவபாலன்-
சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகிகள் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தினால் குழப்பமடைய வைக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வவுனியா, சமளங்கும் கல்லுமலை பிள்ளையார் ஆலயப் பகுதியில் தொல்லியல் எச்சங்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
தொல்லியல் திணைக்களம் மக்களை குழப்பமடைய வைத்துள்ளது. எனவே நாங்கள் இது தொடர்பாக சில விடயங்களை தெளிவுபடுத்தியிருந்தோம். குருந்தூர் மலையிலும் ஆரம்பத்தில் இப்படியான ஒரு கட்டுமானம் முன்னெடுக்கப்பட்டது. தற்போது அங்கு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயம்.
கல்லுமலையில் ஒரு பிள்ளையார் ஆலயம் உள்ளது. அதன் கட்டுமானத்துக்கு உதவி செய்கிறோம். ஆலயத்தை தொடர்ந்து நீங்கள் அமைக்கலாம் என்ற சலுகைகளை கூறி விகாரையை கட்டும் முயற்சிஎதிர்காலத்தில் இடம்பெறும்.
இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருந்தோம். இந்த ஆபத்தை சமளங்குளம் மக்களும் ஆலய நிர்வாகமும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
தமிழர் பகுதிகளில் விகாரையாக எழுந்து நிற்கின்ற இடங்களில் எல்லாம் பல்வேறு வாக்குறுதிகள் சொல்லப்பட்டன.
ஒரு சிலர் ஜேவிபியின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகவும் அடிப்படை நலன்களுக்காகவும் மக்களை குழப்பியுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்கள் நிலங்கள் பறிக்கப்படும், ஜீவனோபாயம் அழிக்கப்படும்.
எனவே, தொடர்ச்சியாக எதிர்வினையாற்றுகின்ற தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒன்றிணைந்து செயற்ப்படவேண்டும் என்பதே எமது அவாவாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.


















