2026 ஆம் ஆண்டில் 15,500 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
புத்தாண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது அரச சேவைப் பிரமாணத்தை மேற்கொண்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அனைத்து மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், கடந்த கால இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் அமைச்சு செயற்படும். அனர்த்தங்களினால் வீடுகளை இழந்த மக்களுக்கு நட்டஈடு வழங்குவதோடு, அவர்களுக்குப் புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதாக அரசாங்கம் உறுதியளிக்கிறது.
திட்டமிட்டபடி 2026 ஆம் ஆண்டில் 15,500 வீடுகளைக் கட்டியெழுப்பும் இலக்கை நாம் நிச்சயம் அடைவோம்.
நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் டி.பி.சரத் கருத்துத் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டானது சவால்கள் நிறைந்த ஒரு ஆண்டாக இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் கட்டியெழுப்பும் ஆண்டாக இது அமையும் எனக் குறிப்பிட்டார்.
பணக்கார நாடு – அழகான வாழ்க்கை என்ற இலக்கை நோக்கி நாம் நகர வேண்டும். எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளுக்கும் அப்பால் சென்று, ‘இயலுமென்றால் செய்வோம், இயலாதுவிட்டால் எப்படியாவது செய்து முடிப்போம்’ என்ற கொள்கையுடன் இந்த ஆண்டில் பணியாற்றுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் குமுது லால் போகஹவத்த உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


















