-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார-
-பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சாத்தியமாகும்-
-நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்-
மக்களுக்கு உறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புபோன்றன இந்த வருடத்தில் நிறைவு செய்யப்படும் என நீதிமயமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருந்த அரசியலமைப்பு உருவாக்க பணிகளை நிறைவு செய்து நாட்டுக்கு உகந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு உதியளித்தோம்.
அதேசமயம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாகவும் உறுதியளித்தோம். 2025ம் ஆண்டு பொருளாதார மீட்சிக்கான ஆண்டாக இருந்தது. அதனை நாம் சரியாக செய்திருக்கிறோம். ஆகவே 2026ம் ஆண்டில் பயங்கரவாத தடைச்சட்டம், நீக்கப்பட்டு சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய சட்டத்தை உருவாக்குவோம். அதேபோல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் போன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.
நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பல பிரச்சினைகளும், குளறுபடிகளும் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்து புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். இதற்கமைய புதிய யாப்புருவாக்கத்துக்கான ஆரம்பக்கட்டம் இம்மாதம் மேற்கொள்ளவுள்ளோம். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காணப்படும். காலம் காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை விடுத்து பொதுக் கொள்கைக்கு அமைய சிறந்த பரிந்துரைகளை முன்வைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.


















