அரசியலமைப்பு பேரவையை கட்சியின் தீர்மானத்துக்கு அடிபணிய வைக்கும் முயற்சியில் இதுவரையான காலத்தில் ஆட்சியில் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் ஈடுபடவில்லை. இந்த ஜனாதிபதியின் செயற்பாடுகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்:-
அரசியலமைப்பு பேரவையின் 3 சிவில் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதன் பின்னர் ஜனாதிபதி புதிய ஒருவரின் பெயரை பேரவைக்கு பரிந்துரைக்கலாம், அதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதியளிக்கலாம்.
அரசியலமைப்பின் பிரகாரம் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததன் பின்னர் பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரையில் அவர்களால் உறுப்பினர்களாக செயற்பட முடியும்.
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பொது இணக்கப்பாட்டுக்கு அமைவாகவே அரசியலமைப்பு பேரவையின் சிவில் பிரதிநிதிகள் மூவர் நியமிக்கப்பட வேண்டும். தற்போது சேவையில் உள்ள மூன்று சிவில் பிரதிநிதிகள் தொடர்ந்து சேவையில் இருப்பதற்கும், தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் பேரவையின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதை தடுப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் முன்வைக்கும் பெயர் பரிந்துரைக்கு இணக்கம் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு பேரவையின் மூன்று சிவில் பிரதிநிதிகள் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இணக்கப்பாட்டுக்கு அமைய நியமிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அவ்வாறு இடம்பெறவில்லை. ஒருவரின் பெயரை பிரதமர் பரிந்துரைப்பார், பிறிதொருவரின் பெயரை எதிர்க்கட்சித் தலைவர் பரிந்துரைப்பார், மூன்றாவது நபரின் பெயரை பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைந்து பரிந்துரைப்பார்கள்.
பிரதமரின் பரிந்துரை தேசிய மக்கள் சக்தி உறுப்பினராக காணப்பட்டால் அரசியலமைப்பு பேரவையின் பெரும்பான்மை பலம் அரசாங்கம் பக்கமே இருக்கும். ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமைவாகவே உயர் நியமனங்கள் வழங்கப்படும். பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் ஒன்றிணைந்து நியமனத்துக்கான பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு ஏற்பாட்டை முறையாக செயற்படுத்தினால் தேசிய மக்கள் சக்தியின் முகவர்கள் அரசியலமைப்பு பேரவைக்குள் நுழையமாட்டார்கள்.
அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகள் நியமனத்துக்கான விண்ணப்பம் பகிரங்கமாக கோரப்பட்டு, விளம்பரம் பத்திரிகைகள் பிரசுரமாகின. சிவில் பிரஜைகளில் பலர் விண்ணப்பித்து அதில் சிறந்த மூவரே தெரிவு செய்யப்பட்டார்கள். இம்முறையும் பகிரங்க விண்ணப்பம் கோரலாம் என்று அரசாங்கத்துக்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த யோசனையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய மக்கள் சக்தியினரை இணைத்துக் கொள்வதற்காகவே பகிரங்க விண்ணப்பம் கோரப்படவில்லை.
அரசியலமைப்பு பேரவையின் தற்போதைய சிவில் பிரதிநிதிகள் மூவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த முறையற்ற பரிந்துரைகளையும், இந்நாள் ஜனாதிபதி முன்வைத்த பெயர் பரிந்துரைகளையும் நிராகரித்து சுயாதீனமாக செயற்பட்டுள்ளார்கள்.
நாட்டுக்கு சிறந்த முறையில் சேவையாற்றிய மற்றும் சுயாதீனமாக செயலாற்றியவர்கள் என்று நம்பிக்கை கொள்ளும் மூன்று பேரின் பெயரை பிரதமர் பரிந்துரைக்கும் வரை பிரதமர் தனித்து பரிந்துரைக்கும் பெயர் பரிந்துரையை எதிர்க்கட்சித் தலைவர் நிராகரிக்க வேண்டும் என்றார்.


















