-நாட்டின் நிலை குறித்து பேராசிரியர் திஸ்ஸ கவலை-
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நாட்டின் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண நாட்டிற்கு ஒரு சரியான இடதுசாரி அரசாங்கமே தேவையெனவும் குறிப்பிட்டார்.
பொரளையிலுள்ள கலாநிதி என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு அவர் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
தற்போதைய அரசாங்கம் முதலாளித்துவ முறையையே தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை.
சாதாரண மக்கள் மீது மறைமுக வரிகள் மற்றும் வட் வரி ஆகியன பாரிய சுமையாக சுமத்தப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தக்கூடிய வசதி படைத்தவர்களிடம் முறையான வரி வசூலிக்கப்படுவதில்லை.
இந்தச் சூழல் சமூகத்தில் பெரும் அநீதியை உருவாக்கியிருக்கின்றது. இதற்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சி போராடும்.
நாட்டில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதோடு, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்து வருகின்றது.
இலங்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுவதால், அவர்களின் தேவைகளுக்கு அரசாங்கம் விசேட முன்னுரிமை அளிக்கவேண்டும் என கோருகின்றேன்.
தற்போது இளைஞர்கள் மத்தியில் மீண்டும் சோசலிச மற்றும் இடதுசாரி கொள்கைகள் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது.இது ஒரு சிறந்த மாற்றமாகும்.
நாட்டிற்கு ஒரு சரியான இடதுசாரி அரசாங்கமே தேவை. தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்களின் பிரச்சினைகளை விடுத்து முதலாளித்துவ வர்க்கத்திற்கே முக்கியத்துவம் அளிக்கின்றது.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களை எதிர்க்கின்றேன்.இத்தகைய ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்க இராணுவம் நாட்டிற்குள் நுழைவது இலங்கையின் இறையாண்மைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் .
சோபா மற்றும் எம்.சி.சி போன்ற உடன்படிக்கைகள் நாட்டின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால் வெளிநாடுகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஒரு சுதந்திரமான நாடாக இலங்கை செயல்படவேண்டும் என அரசாங்கத்தை கோருகின்றேன் என்றார்.


















