-நளின் பண்டார-
பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதில் நேரடியாகத் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கல்வி மறுசீரமைப்புக்கள் என்ற போர்வையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட இந்த அரசாங்கம் என்ன செய்வதற்கு முயற்சிக்கின்றனர்?
6 ஆம் தரத்துக்கான பாடத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருந்த இணையதளமொன்றின் பெயர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளித்திருக்கின்றார். இது ஒரு சதித்திட்டம் எனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் கல்வி அமைச்சிற்குள் அரசாங்கத்துக்கு எதிரான சதிகாரர்கள் யார்?
கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட இந்த அரசாங்கமே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் உண்மையில் புதிய ஆண்டில் அரசாங்கத்துக்கான நற்செய்தியல்ல. எமது நாட்டின் கல்வி எங்கு செல்கிறது என்பதே தற்போது காணப்படும் பாரிய பிரச்சினையாகும். இதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தை நாடுவதில் எவ்வித பயனும் இல்லை. தவறு இடம்பெறுவதற்கு வழியமைத்தவர்களே அதற்கான பொறுப்பினையும் ஏற்க வேண்டும். அவ்வாறு பொறுப்புக் கூற வேண்டிய இடத்திலுள்ள பிரதான அதிகாரி பதவி விலக வேண்டும். ஜனாதிபதி உடனடியாக இது குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்.


















