-அரசிடம் கூட்டாக வலியுறுத்து-
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ‘பிளஸ்’ வடிவமாகும்.
எனவே அவ்வரைவை உடன் வாபஸ் பெறுவதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய சட்டமூலத்தை விரைவாக சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் புத்திஜீவிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக ‘ ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.
அதற்கமைய இப்புதிய சட்டவரைவு தொடர்பான தமது கரிசனைகளைத் தெளிவுபடுத்தி பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, கலாநிதி மகேந்திரன் திருவரங்கன், கலாநிதி ரமிலா யூஸுஃ;ப், கலாநிதி ரணில் டி.குணரத்ன, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் உள்ளடங்கலாக புத்திஜீவிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் 104 பேரும், சிறுபான்மையினரின் கூட்டிணைவு, சமூக அபிவிருத்திக்கான கற்கைகள் நிலையம், இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சட்ட மற்றும் சமூக நிதியம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் உள்ளிட்ட 18 சிவில் சமூக அமைப்புக்களும், கூட்டு ஆசிரியர் சேவை சங்கம், கூட்டு புகையிரத ஊழியர் சங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர் சங்கம், கூட்டு சுகாதார ஊழியர் சங்கம் உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களும் இணைந்து அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் மேலும், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எனும் பெயரில் நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வரைவு தொடர்பில் நாம் தீவிர கரிசனை கொண்டிருப்பதுடன், மிகுந்த அதிருப்தி அடைகின்றோம். கடந்த 2025 ஜனவரி 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய நீங்கள் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் என வாக்குறுதி அளித்தீர்கள்.
அந்த வாக்குறுதி உங்களது அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்னரும், ஏறிய பின்னரும்வெளியிட்ட கொள்கை நிலைப்பாடுகளில் தொடர்ந்து உள்வாங்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி கடந்த ஆண்டு மேமாதம் 29 ஆம் திகதி உங்களது அமைச்சில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடன் நடாத்திய சந்திப்பின்போது அந்த வாக்குறுதி மீளுறுதிப்படுத்தப்பட்டதுடன், புதிய சட்டத்தை உருவாக்கும் பணிகள் வெறும் வெள்ளைத்தாளில் இருந்து பொதுமக்களுடனான பரந்துபட்ட கலந்துரையாடலுடன் முன்னெடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
அவ்வாறிருக்கையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்பதாக அமையவில்லை. மாறாக அதனை மேலும் விரிவுபடுத்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றது. அது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் ‘பிளஸ்’ வடிவமாகும்.
இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் நாங்களும், எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி நீங்களும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் எழுதப்பட்ட மிகமோசமான வரலாற்றைப் பார்த்திருக்கின்றோம். நாம் பயங்கரவாதம் சார்ந்த சட்டங்கள் மற்றும் அவற்றின் ஊடாக சாதாரண மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதம் தொடர்பில் மிகுந்த அச்சமடைகின்றோம்.
சாதாரண பிரஜைகள் பலரது வாழ்க்கை பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் தலைகீழாக மாறிப்போயிருக்கும் அதேவேளை, இலங்கைஅரசு அதனை அங்கீகரிக்கவோ அல்லது உரிய இழப்பீடுகளை வழங்கவோ இல்லை. பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பது ஒடுக்குமுறைகளுக்கும், அநீதிக்கும், வன்முறைகளுக்கும், இனவாதத்துக்கும், சமத்துவமின்மைக்கும், சர்வாதிகாரத்துக்குமான ஓர் ஆயுதமாகும்.
அது சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் முற்றுமுழுதாகப் புறந்தள்ளியிருப்பதுடன், இப்போது உங்களது தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் ஊடாகத் தீர்வுகாண்பதற்கு முயன்றுவரும் ஆழமான பிளவுகளையும் தோற்றுவித்துள்ளது.
எனவே தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு வாபஸ் பெறப்படுவதுடன், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும்என்பதை நாம் தெளிவாக வலியுறுத்துகின்றோம்.


















