-என்.பி.பியின் இரட்டை வேடம் கலைகிறது-
-வடக்கில் பறிபோகவுள்ள தமிழர் நிலங்கள்-
-மக்கள் போராட்டம் வெடிக்கும் – ரவிகரன் எம்.பி-
-வி.சரவணன்-
வடமாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதில் அநுர அரசாங்கமும் உறுதியாக இருப்பதை ‘கிவுல் ஓயா’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் காட்டும் அதீத அக்கறையின் ஊடாக அறியக்கூடியதாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் கூறினார்.
ரூ. 4,170 மில்லியன் செலவில் ‘கிவுல் ஓயா’ திட்டத்தை நடைமுறைப்படுத்த நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் அது குறித்து யாழ்.தினக்குரலுக்கு கருத்து தெரிவித்தபோதே ரவிகரன் எம்.பி மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான சிறிய குளங்கள் மற்றும் பெருமளவு வயல் நிலங்கள் பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.
கிவுல் ஓயா நீர்த்தேக்கத்திட்டம் மாஓயா அல்லது பெரிய ஆறு மற்றும் சூரியன் ஆறு ஆகிய ஆறுகளை மறித்து பாரிய அணைக்கட்டு அமைக்கப்பட்டு கிவுல் ஓயாத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் 6000 ஏக்கர் நீர்ப்பாசன விவசாயக் காணிகள் வெலிஓயாவில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் 3000 பேருக்கு வழங்கப்படவுள்ளது. அந்தவகையில் இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரிய கட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறியநீர்ப்பாசனக் குளங்களும், வெடி வைச்சகல்லு குளத்தின் கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும், வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப் பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி உள்ளிட்ட பகுதிகள் குறித்த நீர்ப்பாசன அணைக்கட்டின் நீரேந்துப்பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படும். இவ்வாறாக தமிழ் மக்களின் விவசாய குளங்களையும் அவற்றின் கீழான வயல் நிலங்களையும், பழந்தமிழ் கிராமங்களையும் அபகரித்து செய்யப்படும் இவ்வாறான திட்டங்கள், கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்பு செயற்பாட்டின் வடிவமாகும்.

மக்களின் காணிகள் மக்களுக்கு எனக் கூறி வடக்கு – கிழக்கு மக்களிடம் வாக்குப் பெற்ற அரசாங்கம், அபகரித்த காணிகளை விடுவிப்பதற்கு பதிலாக புதிதாக மக்களின் காணிகளை அபகரிக்க திட்டமிடுகிறது. இது அநுர அரசாங்கத்தின் இரட்டை வேடத்தை காட்டுகின்றது. இந்தத் திட்டம் வடக்கிலிருந்து தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இந்தத திட்டத்திற்கு எதிராக பாரிய மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்றார்.


















