-வி.சரவணன்-
வன்னி உட்பட வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களிலும் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்ளும் செயற்பாட்டை விரைந்து முன்னெடும்முமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் உரையாற்றுகையிலேயே மெற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
வன்னி உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் தற்போது பெரும்போக நெற்செய்கையின் அறுவடை தொடங்கியுள்ளது.
இவ்வாறான நிலையில், அரசினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நிர்ணய விலையினை அரசாங்கம் அறிவித்தது போல் விவசாயிகளிடமிருந்து உரிய காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லினை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவேண்டும்.
நெற்கொள்வனவில் தாமதம் ஏற்பட்டால் விவசாயிகள் தனியார் நெல் கொள்வனவாளர்களிடமும், இடைத் தரகர்களிடமும் நெல்லினை குறைந்த விலைக்கு வழங்கி நட்டமடையும் நிலை ஏற்படும்.
வன்னி உட்பட வடக்கு, கிழக்கிலுள்ள விவசாயிகள் இம்முறை வெள்ள அனர்த்தத்தினாலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.
எனவே விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை உரிய காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக விரைந்து முன்னெடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.


















