-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான ஆலை கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்று இடம்பெற்றது.
1956ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலை 1985ம் ஆண்டுவரை இயங்கிவந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரணமான சூழ்நிலைகளால் மூடப்பட்டது.
இந்நிலையில் சுமார் 40 வருடங்களின் பின்னர் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்காக சுமார் 6.3 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 30 மாதங்களில் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளது.
நிகழ்வில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பிரதம அதிதியாக கலந்துகொண்டு புதிய ஆலைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இந்த தொழிற்சாலையின் மறுமலர்ச்சி, பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதிலும், இலங்கையின் உள்நாட்டு இரசாயன உற்பத்தி திறனை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் உற்பத்தி அலகுகளை மறுகட்டமைப்பதற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.
கூடுதலாக, பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட், வளர்ந்து வரும் உள்ளூர் சந்தை தேவையை பூர்த்தி செய்ய பாலி அலுமினியம் குளோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி வசதிகளை நிறுவ திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















