-முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்-
-இ.கலைஅமுதன்-
மாகாண சபைகளுக்கு கீழேயே உள்ளூராட்சி சபை இருக்கிறது. மாகாண சபை செயலற்றுள்ள நிலையில் அரசாங்கம் அதனை மீறி தான் விரும்பியவாறு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் தமது கட்சி பிரதிநிதிகளை கொண்டு வந்து சேர்ப்பது சட்ட விரோதமான செயல் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமித் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பிரஜாசக்தி என்கிற அடிப்படையில் கிராம மட்டங்களிலே மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை ஓரங்கட்டி ஜே.வி.பி.தனது பிரதிநிதிகளை நியமிக்கின்ற போக்கு இருக்கிறது. உள்ளூராட்சி சபைகள் என்பது அடிப்படையிலே நேரடியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட விடயமாகும்.
இவை அனைத்தும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கை. அவற்றின் ஊடாக ஜனநாயகத்தை மாத்திரம் அல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கோ, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அரச உத்தியோகத்தர்களுக்கோ தெரியாமல் ஒரு பிரதிநிதியை நியமித்து தமது கட்சி பிரதிநிதி ஊடாக கொழும்பிலிருந்து கொண்டு எல்லாவற்றையும் வழி நடத்தலாம் என்று யோசிக்கிறார்கள்.
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்து பலாலியில் நடை பயணத்தை மேற்கொண்டார். ஆனால் பலாலியில் இருக்கக்கூடிய காணிகள் என்பது அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட விடுவிக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் எவ்வளவு தூரம் காணிகள் விடுவிக்கப்பட்டது என்று சொன்னால் இரண்டு வீதிகளை தவிர காணிகள் விடுவிக்கப்பட்டதாக இல்லை. மாறாக காணிகள் சுவிகரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல்வேறுபட்ட இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை இடம்பெறுகிறது.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அமைதியான சூழல் காணப்படுகிறது. பாதுகாப்பான சூழல் காணப்படுகிறது. மேலதிகமான காணிகள் பிடிக்கப்பட வேண்டிய அவசியம் கிடையாது. மக்களுடைய காணிகள் அவர்கள் வசம் இருக்கிறது. காணிகளை அவர்கள் விடுவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















