பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
ஒவ்வொரு அரசும் ஆட்சிக்கு வருகின்ற போது புதிய புதிய திட்டங்களை கொண்டு வருவார்கள். முன்னைய அரசுகள் வாழ்வின் எழுச்சி, கிராம சக்தி, அஸ்வெசும என திட்டங்களை கொண்டு வந்தனர். அவ்வாறே இந்த அரசும் பிரஜாசக்தி திட்டம் என்ற வறுமை ஒழிப்பு தேசிய நிகழ்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
கடந்த கால அரசுக்களின் இவ்வாறான திட்டங்களின் போது அதில் அரசியல் தலையீடுகள், செல்வாக்குகள் காணப்பட்டதாக இப்போது ஆளும் கட்சியில் இருந்தவர்கள் கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.
இவ்வாறான நிலையில், பிரஜாசக்தி திட்டம்பற்றி அரசின் அறிவிப்பு மற்றும் சுற்று நிரூபத்தில் கூறப்பட்டவிடயங்கள் போன்று யதார்த்தத்தில் இல்லை. கிராமங்களில் இடம்பெறுகின்ற பிரஜாசக்தி திட்டத்தின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்த விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. பல இடங்களில் இத்திட்டம் தொடர்பில் சுற்று நிரூபங்களில் சொல்லப்பட்ட விடயங்களுக்கு மாறான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுகின்றது. அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த முடியாத நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, நாம் கோருவது என்னவெனில் இத் திட்டம் தொடர்பில் அரசு அரசியல் செய்வதனை விடுத்து சட்டப்படி நடக்க வேண்டும் என்பதேயாகும் என்றார்.


















