-ஸ்ரீநேசன் எம்.பி சுட்டிக்காட்டு-
புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும், சிங்கள மொழியில் கற்பவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதை வரவேற்றுள்ள தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், கடந்தகால தவறு திருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு தேவையானது என்றாலும் முறையான ஆய்வுகள் செய்யப்படாமல் அவசரமாக செய்யப்படும் போது தவறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. வரலாற்றில் இவ்வாறு தவறுகள் இடம்பெற்றுள்ளன.
உதாரணத்திற்கு 1956 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம் தமிழ் மொழிமூலம் கற்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 1971இல் பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் என்ற விடயமும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோன்று 1972இல் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் கல்வி ரீதியில் தமிழ் – சிங்கள மாணவர்களுக்கு இடையே பாரபட்சமான நிலைமை ஏற்படுத்தியிருந்தது.
அத்துடன் 1981இல் யாழ். நூலகம் எரிக்கப்பட்டமையும் கல்விக்கு விழுந்த அடியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு வரலாற்றை நோக்கும்போது கல்வி பல பக்கச்சார்பான நடைமுறையை பின்பற்றி வந்துள்ளது என்பது தெரிகின்றது.
ஆகவே கல்வியில் மறுசீரமைப்பை செய்யும்போது சிங்கள மொழியில் கற்பவர்களுக்கும் தமிழ் மொழியில் கற்பவர்களுக்கும் சம வாய்ப்பை வழங்கும் வகையில் அது அமைந்தால் வரவேற்கத்தக்கது. காலம் காலமாக செய்த தவறை கல்வி மறுசீரமைப்பின் ஊடாக திருத்திக்கொள்ள வேண்டும்.
உண்மையில் மதம் சம்பந்தமான அடிப்படைவாத சிந்தனை இந்த நாட்டை மிக மோசமாக பாதித்துள்ளது. இந்து மதம் தொடர்பான ஆலோசனைகளை பெறுகின்ற போது, அரசியல் சார்ந்தவர்களின் ஆலோசகர்களாக இருந்தவர்கள் அதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிடுத்து பல்கலைக்கழகங்களின் சைவ சித்தாந்தசபை, சைவ பரிபாலன சபை, இந்து மாமன்றம் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கக்கூடிய சபைகள் உள்ளன. இவை இதில் உள்ளடக்காமல் இருப்பது குறைபாடாகும். கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டுக்கு தேவையானதே.
இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தி, தேசிய ஐக்கியம் உருவாக வேண்டும். சகலருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம்.எமது கல்வி முன்பள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது. முன்பள்ளி பாடசாலைக்கு அப்பால் இருந்தாலும் அதனை முழமையாக அரசாங்கம் ஏற்று ஆசிரியர் நியமனம், அவர்களுக்கான பயிற்சி, கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து மேற்பார்வை செய்து மாணவர்களின் விருத்தி தொடர்பில் அவதானிக்க வேண்டும். இதனை வெளியில் விடுவதால் மாணவர்களின் அடிப்படை கல்வி பாதிக்கப்படலாம்.
இதனால் முன்பள்ளி ஆசிரியர்களையும் அரசு பொறுப்பேற்று தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று பிள்ளைகளுக்கு அறிவு சார்ந்த கல்வியை விருத்தி செய்யவும் வேலைத்திட்டங்களை எடுக்க வேண்டும் என்றார்.


















