ஒரு சில முதலாளிகள் இலாபம் ஈட்டுமுகமாகவே அரசாங்கம் அரிசியை தனியார் இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்படி விடயம் தொடர்பில் வவுனியாவில் நேற்று அவர் நடத்திய ஊடக சந்திப்பில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
அரசாங்கம் நெல்லுக்கு ஒரு விலையை நிர்ணயித்துள்ள போதிலும், விவசாயிகளிடமிருந்து நெல்லினை நிர்ணய விலையிலிருந்து ஐம்பது ரூபாய் குறைத்தே வர்த்தகர்கள் கொள்வனவு செய்யக் கேட்கின்றனர்.
இந்நிலை மாற வேண்டுமாயின் அரிசினால் வடக்கு கிழக்கிலே தற்போது வெட்டப்படும் நெல்லினை கொள்வனவு செய்ய முன்வர வேண்டும்.
எமது நாட்டில் அரிசி பற்றாக்குறை ஏற்படின் அதற்கு தகுந்தால் போல் இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக அதாவது நாட்டில் காணப்படும் பற்றாக்குறையை விட அதிகளவான அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றமையை பார்க்கின்ற போது ஒரு சில முதலாளிகள் இலாப மீட்ட அரசாங்கம் உதவி செய்வது போல் உள்ளது.
நாட்டிற்கு தேவையான அரிசி இறக்குமதியினை அரசே செய்ய வேண்டும். மாறாக தனியாரினை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் பட்சத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாகவே இறக்குமதி செய்வார்கள். இதனை தடுக்கவே முடியாது. இதையே முன்பிருந்த அரசும் மேற்கொண்டது தற்போதைய அரசும் செய்கின்றது என தெரிவித்தார்.


















