-த.அம்பிகாவதி-
இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கமைய இந்த ஆண்டிற்கான வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக கிராம அலுவலர்கள் வீடுகளுக்கு வருகைதர மாட்டார்கள் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே வாக்காளர்கள் கிராம அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று உரிய படிவங்களைப் பெற்று அவற்றைச் சரியாகப் பூர்த்தி செய்து கிராம அலுவலரிடம் சமர்ப்பித்தல் வேண்டும் என குறிப்பிடபட்டுள்ளது.
01-02-2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதாவது 31-01-2008 இற்கு முன்பு பிறந்தவர்கள், 01-02-2025 முதல் 31-01- 2026 வரையிலான காலப்பகுதிக்குள் புதிய வதிவிடத்திற்கு வருகை தந்தவர்கள், மேற்குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் குடும்ப உறுப்பினர் இறந்திருந்தால் அல்லது வதிவிடத்தை விட்டுச் சென்றிருப்பின், 01-02-2008 தொடக்கம் 31-01-2010 வரையிலான காலப்பகுதியில் பிறந்தநபர்கள், தொடர்புடைய வீட்டுத் தலைவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் தகவல்களில் ஏதாவது திருத்தம் செய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உரிய படிவங்கள் பூர்த்தி செய்து வீட்டுத் தலைவரின் கையொப்பத்துடன் பிரிவின் கிராம அலுவலரை 20-02-2026 ஆம் திகதிக்கு முன்னர் சந்திக்குமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


















