-இலங்கை தேசிய நிர்மாண சங்க வடமாகாண கிளையின் தலைவர் நந்தரூபன்-
வடக்கு மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை வீடமைப்பு, அரச அபிவிருத்தித் திட்டங்கள், தனியார் கட்டுமானங்கள் மட்டுமல்லாது கட்டுமானத் துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் கொண்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்து வருகிறது என இலங்கை தேசிய நிர்மாண சங்க வடமாகாண கிளையின் தலைவர் ந. நந்தரூபன் தெரிவித்தார்.
ஒரு அடிப்படை கட்டுமானப் பொருளான மணல் இன்று சட்டபூர்வமான வழிகளில் கிடைக்காத நிலையில் அதிக விலைக்கும் சென்றுள்ளது. அதே நேரத்தில் சட்டவிரோத சந்தைகளில் மணல் மிக உயர்ந்த விலைக்கு இலகுவாக கிடைப்பது ஒழுங்குமுறை, கண்காணிப்பு மற்றும் நிர்வாகத் தோல்விகளைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
இது மணல் மாபியா கட்டுப்படுத்த முடியாததாலோ, நிர்வாக பலவீனங்களாலோ, அல்லது நிறுவனத் தோல்வியாலோ ஏற்பட்டிருக்கலாம் காரணம் எதுவாக இருந்தாலும், வட மாகாண அபிவிருத்தி நேரடியாக முடக்கப்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
பொறியாளர்களாக, பிராந்திய அபிவிருத்தியை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளில் தலைமை பொறுப்பு ஏற்க வேண்டியது எங்களின் கடமை என நாங்கள் நம்புகிறோம்.
அதன் அடிப்படையில் வடக்கு ஆளுநர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒழுங்குபடுத்தப்பட்ட மணல் யார்டுகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இத்தகைய மணல் யார்டுகள் மணல் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், அநியாய விலை உயர்வுகளை கட்டுப்படுத்தவும் சட்டவிரோத மணல் விநியோகத்தையும், இலஞ்சங்களையும் தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்யவும் உடனடி தேவையாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


















