-சு.பாஸ்கரன்-
முல்லைத்தீவு – குரவில் கிராமத்தில் 2014ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2014ம் ஆண்டு மாசி மாதம் 11ம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரவில் பகுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட இருவருக்கிடையில், ஏற்பட்டிருந்த வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் குற்றவாளி அர்ச்சுனா றஜீபன் (வயது19) என்பரை கத்தியால் குத்திக் காயமேற்படுத்திய நிலையில், படுகாயமடைந்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிசார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபரை கைது செய்து, இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முலலைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும், பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில், முன்னெடுக்கப்பட்டு விசாரணைகள் நிறைவுபெற்ற நிலையில் நேற்று குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி பு.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஏதிரிக்கு எதிர் தரப்பு சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் எதிரியிடம் மன்றிற்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டு அவருக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதையடுத்து நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்று குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


















