இலங்கையை எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக மாற்றும் முயற்சிக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சி பணிகளுக்கான சர்வதேச விலைமனு நடைமுறை, நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்கு காரணமாக தாமதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை பெற்றோலிய மேம்பாட்டு அதிகாரசபை இந்த மாத தொடக்கத்தில் சர்வதேச ஏலத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் காரணமாக அது தடைப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தொடரப்பட்ட நீதிமன்ற வழக்கு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் கோரிய கூடுதல் அவகாசம். 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின்படி, அகழ்வாராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் சர்வதேச போட்டி ஏல முறை மூலமே நடத்தப்பட வேண்டும்.
இது குறித்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ.ராஜகருண கூறுகையில், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
அனைத்து சட்டச் சிக்கல்களும் தீர்க்கப்பட்ட பின்னரே விலைமனு விடப்படும் எனத் தெரிவித்தார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘கெய்ர்ன் இந்தியா’ நிறுவனம் நடத்திய ஆய்வில், மன்னார் வளைகுடாவில் உள்ள பராகுடா மற்றும் டொராடோ ஆகிய 2 கிணறுகளில் ஹைட்ரோகார்பன் படிவுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இலங்கையின் கடல் பகுதியில் காவேரி படுகை, மன்னார் படுகை, தெற்கு இலங்கை படுகை, கிழக்கு இலங்கை படுகை என நான்கு முக்கிய படுகைகள் உள்ளன.
நாடாளுமன்ற ஊடகப் பிரிவின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் மதிப்பு சுமார் 267 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்த அகழ்வாராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க இந்தியா மற்றும் கட்டார் போன்ற நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே ஆர்வம் காட்டி வருகின்றன.


















