டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான பதிவு நீடிக்கப்பட்டுள்ளது. கால்நடை பண்ணைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்களது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்று அவற்றை பூரணப்படுத்தி எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் தங்களது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட கால்நடை வைத்திய அலுவலகங்கள் தங்களது கால்நடைகளுக்கான பதிவுகளை மேற்கொண்டு அவற்றுக்கான பதிவு அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
18 மாதங்களுக்கு மேற்பட்ட கால்நடைகளை பதிவு செய்யாது வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பண்ணையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்காலங்களில் பதிவு செய்யப்படாத கால்நடைகள் அரசு உடமையாக்கப்படலாம் என்பதோடு கால்நடைகளுக்கான தடுப்பூசி ஏற்றுதல், கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல், கால்நடை காப்புறுதி செய்தல், மற்றும் கால்நடைகள் திடீர் இழப்புக்கள் ஏற்படும் போது நஷ்டஈடு பெறுதல் என்பன பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கு வழங்கப்பட மாட்டாது என்பதையும் பண்ணையாளர்கள் புரிந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் வட மாகாணப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதே போல் ஆடு,செம்மறிஆடு,பன்றி மற்றும் கோழிப் பண்ணைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை தங்களுக்குரிய பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்று அவற்றினை பதிவு செய்துகொள்ளுமாறும்; பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


















