போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளைச் சேவையில் இணைத்துக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்களாயின், பேருந்து உரிமையாளர்களின் வாகன அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப்பொருட்களுக்கு அடிமையான சாரதிகளை சேவையில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் அறிவித்தார்.
அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, அதிகளவான பேருந்து சாரதிகள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை தெரியவந்ததை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 594 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 422 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 66 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 4,202 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















