-வி.சரவணன்-
வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெடுங்கேணி – கூழாங்குளம் வீதியில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தை நிர்மாணிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இக்கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
அதற்கமைய குறித்த பாலம் தொடர்பில் அமைச்சர் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் விபரம் கோரியிருந்தாh.; 19 மீற்றர் நீளமான குடமுருட்டி பாலத்தை அமைப்பதற்கு ஏறத்தாழ 80 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுமென வவுனியா மாவட்ட வீதி அபாவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.கௌசிகன் இதன்போது தெரிவித்தார்.
இதனை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமென அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.
இதனையடுத்து வடமாகாண பிரதமசெயலாளர் திருமதி தனுஜா முருகேசன் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாண்டிற்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் குறித்த குடமுருட்டிப் பாலத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமெனத் தெரிவித்தார்.
மேலும், குறித்த பாலத்தின் நிர்மாணம் தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளராலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















