-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை நிறுவ நீதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணக்கார, அதற்கான பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருவதாகவும் கூறினார்.
கொழும்பு.07, பௌத்தலோகா மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் ஊ76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மேற்படி விசேட மேல் நீதிமன்றம் அமையவுள்ளதுடன், அதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்றுவருகிறது.
பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களை நிறுவும் பணிகளை நேற்று நேரில் கண்காணித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதேபோல், முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டார்.
ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்தி, வழக்குக் காரியங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இலக்கம் B/88, கிரகரி வீதி, கொழும்பு 07, இலக்கம் C-76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இலக்கம் B-108, விஜேராம வீதி, கொழும்பு 07 மற்றும் இலக்கம் B-12, ஸ்டேன்மோர் கிரசன்ட் ஆகிய முகவரிகளில் உள்ள 4 வீடுகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















