-ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம்-
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோரின் இணைத்தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பை அடுத்து, அதில் கலந்துரையாடப்பட்ட மற்றும் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு இரு தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்களில் இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைசார் மறுசீரமைப்புக்கள், நடைமுறை முன்னேற்றங்கள் மற்றும் ஏனைய சட்ட ரீதியான முயற்சிகளின் தற்போதைய நிலைவரம் குறித்துப் பரிமாறுவது குறித்து ஆராயப்பட்டன.
குறிப்பான பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல், நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், சிறுவர்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் அண்மையகால முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டு ஆணைக்குழு சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அதன் நீட்சியாக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய சுயாதீன கட்டமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் என்பன பற்றி ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கு இலங்கையின் பிரதிநிதிகளால் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் திட்டத்தின் புதிய விதிமுறைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினர்.
இவ்வேளையில் நாட்டின் நிலையான வளர்ச்சியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் முக்கிய வகிபாகம் குறித்துப் பிரஸ்தாபித்து, அதனைப் பாராட்டிய இலங்கைப் பிரதிநிதிகள், தற்போது நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கல் சுழற்சி முடிவடைந்ததும், மீண்டும் அதனைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான தமது நோக்கத்தை வெளிப்படுத்தினர்.
அதனை செவிமடுத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், தற்போதைய ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவ்வதிகாரிகள், பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருத்தமான அமைப்புக்களுடன் இணைந்து செயலாற்றுமாறு தெரிவித்தனர்.


















