தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர்.
அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து நேற்று மாலை 5 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கார் ஒன்றில் வந்த குழுவினர் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர்.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸாரின் 3 குழுக்கள் உள்ளிட்ட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுடன், இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 7 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


















