-கஜிந்தன்-
தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள ‘பிரஜாசக்தி’ என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அத்திட்டத்துக்கு சபை ஒத்துழைக்காது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு பிரச்சினைகள் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், அதற்கான பொறிமுறைகளும் எட்டப்பட்டன.
இந்நிலையில் உறுப்பினர் செல்லப்பா பார்த்தீபன் பிரஜா சக்தி திட்டம் தொடர்பில் சபையில் சமர்ப்பித்த முன்மொழிவு விவாதத்துக்கு விடப்பட்டது. இதன்போது உறுப்பினர்கள் குறித்த திட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்றும், ஜே.வி.பி என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அரச ஊழியர்களின் அதிகாரங்கள், சட்டவாக்கங்களை இந்த திட்டத்தின் ஊடாக கேள்விக்குறியதாக்குவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் ‘பிரஜா சக்தி’ திட்டம் கட்சியின் இருப்பை தக்கவைப்பதற்கான அரசின் ஏற்பாடாக இருக்கின்றதே தவிர மக்களின் வறுமையை ஒழிப்பதற்கன ஏற்பாடாக இருக்கவில்லை எனவும் தெரிவித்து சபை அதற்கு ஒத்துழைக்காது என தீர்மானம் நிறைவேற்றினர்.


















