-வவுனியாவில் பெண் ஒருவர் கைது-
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் வைத்து பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தில் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
பண்டாரிக்குளம் முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நேற்று திங்கட்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றது.
கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய, பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு துரிதமாகச் செயல்பட்டு கத்திக் குத்து நடத்திய பெண்ணை உடனடியாக கைது செய்தனர்.
கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் 50 வயதுடைய பெணே மேற்படிச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அடிப்படையில், கத்திக் குத்துத் தாக்குதல் நடத்திய பெண் அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக துப்பரவு வேலை செய்து வந்ததாகவும், அங்கு வாடகை அடிப்படையில் தங்கியிருந்த 64 வயதுடைய பெண் ஒருவருடைய வீட்டிலும் அவர், துப்பரவு பணி செய்து வந்ததாகவும், இந்நிலையில் இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த துப்பரவு பணி செய்த பெண்னை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் உரிமையாளர் பணியில் இருந்து விலக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர் தன்னுடன் முரண்பட்டுக் கொண்ட அந்த வயோதிபப் பெண் மீது இவ்வாறு கத்திக் குத்துத் தாக்குதல் மேற்கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கத்திக் குத்துக்கு இலக்கான பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கத்திக் குத்துத் தாக்குதல் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணையின் பின் அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


















