இலங்கையில் முதன்முறையாக வடக்கு மாகாணத்தில் சமூக மட்டத்தினருக்கான ‘கிராமிய ஒளிவாழ்வுத் திட்டம்’ மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆகியன விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
இத்திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இரண்டாம் கட்டச் செயற்பாடுகளை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர் கடந்த காலங்களில் பாடசாலைகளில் இத்திட்டத்தை முன்னெடுத்தபோது எதிர்கொண்ட சவால்களைப் பட்டியலிட்டு இம்முறை அவற்றைத் தவிர்த்து விரைவாகச் செயற்பட முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.
மாணவர்களை அடையாளம் காண்பதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஒவ்வொரு வலயத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொத்தணிகளை உருவாக்கி சிகிச்சை முகாம்களை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இம்முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கட்டாயம் பிரசன்னமாகியிருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் முன்பள்ளிச் சிறுவர்களுக்கும் இத்திட்டத்தை எவ்வாறு விரிவுபடுத்தலாம் என்பது குறித்தும் தனது ஆலோசனைகளைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் சில சவால்கள் இருந்தபோதிலும் முதலாம் கட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதைச் சுட்டிக்காட்டியதுடன், வலயக் கல்விப் பணிப்பாளர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இரண்டாம் கட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்தும் பரிசோதிக்குமாறு அவர் மருத்துவ நிபுணரைக் கேட்டுக் கொண்டார்.
இத்திட்டம் தொடர்பில் விளக்கிய மருத்துவ நிபுணர் எம்.மலரவன் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலுமுள்ள கிராமங்களை வறுமை நிலையின் அடிப்படையில் வகைப்படுத்தி அதற்கமைவாக முகாம்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.


















