-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்-
-த.அம்பிகாவதி-
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகங்கள் மாகாணத் திணைக்களங்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும். இவ்வாறான கூட்டு முயற்சிகளின் ஊடாகவே எதிர்காலத்தில் எமது மாகாணம் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள தொழில்நுட்ப பீடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டில் வடக்கு மாகாணத்துக்குப் பல்வேறு நிதி மூலங்களிலிருந்து பெருமளவிலான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ளன. இந்த நிதியினூடான அபிவிருத்தித் திட்டங்கள் தரமானதாகவும், உரிய காலவரையறைக்குள்ளும் நிறைவு செய்யப்பட வேண்டும். இருப்பினும் எமக்கு ஆளணி வளம், குறிப்பாகத் தொழில்நுட்ப ஆளணி வளத்தில் மிகப் பெரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன. எனவே இவ்வாறான சவால்களை வெற்றிகொள்ளப் பல்கலைக்கழக சமூகம் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க முடியும்.
இந்த ஆண்டு மாத்திரமன்றி, எதிர்காலத்திலும் இத்தகைய விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வலுவானதொரு பொறிமுறையை நாம் உருவாக்க வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்ப பீடம் மற்றும் பொறியியல் பீடங்களில் இருந்து வெளியேறிய மாணவர்களையும், இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவர்களையும் பயிற்சி அடிப்படையில் நாம் எமது செயற்றிட்டங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.
எம்மிடமுள்ள மனித வளங்களை உச்சளவில் பயன்படுத்தி மாகாணத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.


















