வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இலங்கை இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் காணியின் ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சிக்கு மக்களின் எதிர்ப்பை யடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.
இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
மே 2002 முதல் விசேட அனுமதியின் பின்னர், ஒரு சிலருக்கு மாத்திரம் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
போர் தீவிரமடைந்ததால், ஜூன் 2006 இல் அந்த அனுமதியும் நிறுத்தப்பட்டதோடு, நல்லாட்சி அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக உள்ளூர்வாசிகளுடன் கோயிலுக்குச் சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில், ஜூன் 24, 2023 அன்று வடக்கில் 234 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் ஆலயத்தில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். எனினும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்ற நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையையும் அதைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தையும் இராணுவம் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், தமிழ் மக்களின் தனியார் நிலங்கள் வழியாக கோயிலுக்குச் செல்லும் தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக மாற்றும் நோக்கத்துடன் பணியை ஆரம்பித்த இராணுவம், உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையடுத்து கைவிட்டதாக, வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவிக்கின்றார்.
இராணுவத்தின் முயற்சிகள் குறித்து தெல்லிப்பழை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதேச சபைத் தலைவர், கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதைக்கு அருகில் தற்போது இராணுவ முகாம் இல்லாவிட்டாலும், இராணுவ வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்று இன்னும் அந்த இடத்தில் காணப்படுவதாகவும் வலியுறுத்துகிறார்.
வாகனம் பழுதுபார்க்கும் நிலையத்தை உடனடியாக அகற்றுமாறும், இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை பக்தர்களுக்காகத் திறக்குமாறும், கோயிலுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும் பிரதேசத்தின் தமிழ் சைவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















