-கிராம அலுவலர்களிடம் யாழ்.அரச அதிபர் கோரிக்கை-
-த.அம்பிகாவதி-
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரியுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் கடந்த புதன்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது தலைமையுறையாற்றுகையிலேயே மாவட்ட அரச அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பில் யாழ் மாவட்டத்திலிருந்து குறைந்த அளவான விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்படுகின்றன. ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.
எனவே,கிராம அலுவலர்கள் ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில், ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதியுதவி பெற்றுக் கொள்ளக்கூடிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நிதியுதவியின் அளவு, மருத்துவ உதவி அல்லாத ஏனைய கோரிக்கைகள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எதிர்பாராத அனர்த்த நிலைமைகளுக்கு ஆளாகும் மீனவர்களின் குடும்பங்களின் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்விக்கான உதவிகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் ஏதேனும் எதிர்பாராத அனர்த்தங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்களின் இந்த நாட்டில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக கல்வி உதவி வழங்குதல் போன்றவற்றுக்கான அறிவுறுத்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டல் நடைபெற்றது.
இதையடுத்து கிராம அலுவலர்கள் கடமைகளில் எதிர் நோக்குகின்ற சவால்கள் தொடர்பாகவும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் கேட்டறிந்தது கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பா. ஜெயகரன், மாவட்ட செயலக பிரதம காணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி, நிர்வாக உத்தியோகத்தர் கி. பொ. தனபாலா, பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















