வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அனுமதியற்ற சட்டவிரோத கட்டடம் ஒன்றை கட்டப்பிராயில் இடித்து அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸை வேறு பிரதேசத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் தான் கூட்டிவந்த சகாவிடம் தொலைபேசியை வழங்கி தான் தவிசாளருடன் பாதை பிரச்சினை ஒன்று தொடர்பாக முரண்படவுள்ளமையை வீடியோ பதிவு செய்யமாறு தெரிவித்துவிட்டு தவிசாளரை அவதூறாகப் பேசியதுடன் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தார்.
தங்களுக்கு எதாவது பிரச்சினைகள் இருப்பின் அலுவலகத்தில் முறைப்படி அணுகுமாறு தெரிவித்துவிட்டு கடமையில் ஈடுபட்டார். இந் நிலையில் பொதுமக்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் தவிசாளரை மரியாதைக்குறைவாக பேசி இடையூறாக செயற்பட்ட நிலையில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவரை நேற்று செவ்வாய்க்கிழமை மேலதிக நீதவான் நீதிமன்றில் கோப்பாய் பொலிஸார் முற்படுத்தியதுடன் பி அறிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் எதிராளிக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்று எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் உத்தரவிட்டது.


















