-இ.கலைஅமுதன்-
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 119 அல்லது 0212222221 என்ற தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ள பொலிஸார், இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக முறைப்பாடுகளை வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
வாகனம் தவிர்ந்து மேலதிக போத்தல்களில் மற்றும் எரிபொருள் கொள்கலன்கள், தாங்கிகளில் எரிபொருள் நிரப்புவது தவிர்க்கப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 08 எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், எங்காவது அவ்வாறு எரிபொருள் வழங்கப்படின் உடனே மேற்குறிப்பிட்ட இலக்கங்களிற்கு அறிவிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாரேனும் வாகனங்களில் எரிபொருளை நிரப்பியபின் அதனை வேறு கொள்கலங்களிற்கு மாற்றிவிட்டு, மீள எரிபொருள் பெற வந்தாலோ அல்லது வீடுகளில் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தாலோ உடனே மேற்படி இலக்கத்திற்கு அறிவிக்கவும்.
தமது முறைப்பாடுகள் ஆதாரத்தோடு வழங்கப்படும்போது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமது முறைப்பாடுகள் தொடர்பில் இரகசியம் பேணப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே மக்கள் தவறுகளை சுட்டிக்காட்ட முன்வந்தால் மட்டுமே இந்தச் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க முடியும். இதனால் பல உண்மையான தேவையுடையோர் எரிபொருளை நீதியாகப் பெற்று பயனடைய இது வழிசமைக்கும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
















