-சொ.வர்ணன்-
யாழ்.மாவட்டத்தில் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதிவரையில் சுமார் 8 லட்சத்து 77 ஆயிரத்து 800 லீற்றர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் கூறினார்.
மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் வரிசை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
தேவையான எரிபொருள் தினசரி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 3 லட்சம் லீற்றர் பெட்ரோல் 36 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக வழங்கப்பட்டபோதும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக வரிசையை காணக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 400 லீற்றர் பெட்ரோல் வழங்கப்படும்.
கடந்த 4 நாட்களில் 25 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகரப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் 36 இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் மற்றும், 5 ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக எரிபொருள் விநியோகம் செய்யப்படுகிறது.
இன்றைய தினம் மீண்டும் 2 லட்சத்து 90 ஆயிரத்து 400 லீற்றர் பெற்ரோல் யாழ்.மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன், மண்ணெண்ணையும் வழங்கப்படவுள்ளது.
ஆகவே யாழ். மாவட்டத்திற்கு தேவையான எரிபொருட்கள் தினசரி வழங்கப்பட்டுவரும் நிலையில் மக்கள் எரிபொருள் நிலையங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தாது பொறுப்புடன் செயல்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.


















