-கடற்றொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம்.பி.கோரிக்கை-
-சொ.வர்ணன்-
காங்கேசன்துறை,ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்று ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத இரு மீனவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்; கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று அவர் உரையாற்றுகையிலேயே மெற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில:;
ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் காணாமல் போய் ஆறு நாட்கள் கடக்கின்ற நிலையில் அவர்களின் குடும்பங்கள் மிகவும் வேதனையுடன் உள்ளனர்.
இது குறித்து காணாமல் போன மீனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடற்படையினர்,பொலிஸார் மற்றும் கடற்றொழில் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர்.எனினும் காணாமல் போன மீனவர்களின்; நிலைமை தொடர்பில் இதுவரை அவர்களது குடும்பங்களுக்கு எதனையும் அறிவிக்காமையையிட்டு மன வருத்தத்தை அளிக்கின்றது.
கடலில் அவர்கள் திசைமாறி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்களை தாங்கள் கண்டதாகவும் இந்திய மீனவர்கள் காங்கேசன் துறை மீனவர்களிடம் கூறிய ஒளிப்பதிவும் உள்ளது.இந்நிலையில் நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்க முடியாத விடயம்.
ஆகவே கடலில் காணாமல் போன மீனவர்கள் தொடர்பிலும் அவர்களின் குடும்பத்தின் நிலைமை தொடர்பிலும் கரிசனை எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகின்றேன் என்றார்.


















