-இ.கலைஅமுதன்-
யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றபோதே மாநகர சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் முன்பாக வைக்கப்படும் பொருட்களை அகற்ற ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது நடைமுறைக்கு வராததால் எதிர்வரும் மூன்று தினங்களுக்குப்பின் அவ்வாறு நடைபாதையில் வைக்கப்படும் பொருட்களை அகற்ற யாழ் மாநகர சபை தீர்மானித்துள்ளது.
இவ்வாறு நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்களை மாநகர சபை அகற்றிய பின் அப்பொருட்களை தண்டப்பணம் செலுத்தியே மீளப்பெற முடியும் என்றார்.

















