-மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு-
-பா.பிரதீபன்-
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளதாக வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்.
தையிட்டி விகாரைக்கு எதிராக கடந்த டிசம்பர் ; 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேலன் சுவாமி, வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி. நிரோஷ் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐவர் மீது தாக்குதலை மேற்கொண்ட பொலிஸார் அவர்களை கைது செய்திருந்தது.
இதையடுத்து பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இத் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராக வலி. கிழக்கு தவிசாளர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறையிட்டிருந்தார்.
இதன்; அடிப்படையிலான விசாரணைக்கு முறைப்பாட்டாளரையும் எதிராளியான பொலிஸாரையும் தமது அலுவலகத்திற்கு நேற்று புதன்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் அழைத்திருந்தார்.
விசாரணையின் போது, விகாரைக்கு சிங்கள மக்களும் வருகை தந்தமையால், போராட்டகாரர்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாது தடுக்கவே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தோம்.
அவர்களை கைது செய்யும் போது குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டோம் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதற்கு பொலிஸார் எம்மை தேடி தேடி கைது செய்ததுடன் , பொலிசாரின் தடைக்கு அப்பால் எம்மை இழுத்து சென்று எம் மீது தாக்குதல் மேற்கொண்டே வாகனத்தில் ஏற்றினார்கள் என விடயத்தினையும் விசாரணைகளில் நான் தெரிய படுத்தினேன் என வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்.
இந்நிலையில், எம் மீதான தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பிலான ஆதாரங்கள், சாட்சியங்கள், அறிக்கைகள் என்பவற்றை எதிர்வரும் 14 நாட்களுக்குள் தமக்கு சமர்ப்பிக்குமாறும், அதன் பின்னர் கொழும்பு அலுவலகத்திற்கு மேலதிக நடவடிக்கைக்காக தாம் அனுப்பி வைப்போம் என மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார் என தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.


















