-வடக்கு ஆளுநரிடம் பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை-
-த.சுபேசன்-
கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு மண்ணெண்ணெய் தாங்கி அமைக்காக வடமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்;:
கைதடிச் சந்தியில் அமைந்துள்ள தென்மராட்சி மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய மண்ணெண்ணெய் தாங்கி பலமுறை திருத்தம் செய்த போதும் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக கைதடி கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலைமை நீடித்து வருகின்றது.
தற்போது யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள சூழலில்,
குறிப்பாக தென்மராட்சி மேற்கு பகுதியில் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ள முடியாதால் பல்வேறு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
இவற்றினைக் கருத்திற்கொண்டு விரைவாக விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பெறக்கூடிய வகையில் புதிய மண்ணெண்ணை தாங்கி மற்றும் அதற்கு தேவையான டிஜிட்டல் மீற்றர் பம்பிகள் உள்ளிட்டவை பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கையை வடக்கு மாகாண சபை ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே கூட்டுறவு துறையின் வளர்ச்சிக்கும், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்கும் நன்மைசெய்யும் வகையில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















