-க.கனகராசா-
தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்லாமல் அது ஒரு கௌரவமான தொழில்முறையாக மாறியுள்ளதெனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு – 2025’ நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.இதில் ஆளுநர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
இன்று இளையவர்கள் சமூகப் பிறழ்வுகளுக்கு உள்ளாகுவதற்கு, அவர்கள் விளையாடுவதற்கான போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஒரு பிரதான காரணமாகும்.
தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாது.
ஒரு சிறந்த தலைமைத்துவப் பண்பையும், சமூக சவால்களை எதிர்கொள்ளும் மனத்திடத்தையும் விளையாட்டுத்துறையாலேயே வழங்க முடியும்.
எனவே, படிப்பு… படிப்பு… என பிள்ளைகளை மன அழுத்தத்துக்கு உள்ளாக்காமல், அந்த அழுத்தங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் விளையாட்டை நோக்கியும் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள் என கோருகின்றேன்.
இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு கௌரவமான தொழில்முறை. திறமையான வீரர்களைப் பாதுகாப்புத் தரப்பினரும் வர்த்தக நிறுவனங்களும் உள்வாங்குவதை நாம் காண்கின்றோம்.
அதேவேளை, அரசாங்கமும் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் மற்றும் உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதில் அதீத அக்கறை செலுத்தி வருகின்றது. இந்த வாய்ப்புகளை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


















